Showing posts with label National News. Show all posts
Showing posts with label National News. Show all posts

மும்பை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - 2 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா நகரில் 4 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
இதனால், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருந்த 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற மீட்புப்பணியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த கட்டிவ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 மற்றும் 30 வயது நிரம்பிய 2 ஆண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி மிகவும் மோசமான, பாழடைந்த நிலையில் இருந்தே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத யாத்திரைக்கு தயாராகிறது ஒடிசாவின் பூரி நகரம்....!

ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வருகிற ஜூலை 1-ந் தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒடிசா சுகாதார சேவைகள் இயக்குனர் பிஜாய் மொகபத்ரா நேற்று தெரிவித்தார். பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 11-ந்தேதி விசாரணை

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ, தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ், நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன் முறையிட்டார்.

அப்போது, 'கடந்த மே மாதம் 57 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் சில தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என்றார். இதற்கு நீதிபதிகள், 'நீங்கள் தெரிவித்திருக்கும் தகவல் துரதிஷ்டவசமானது.

உங்களது ரிட் மனுவை கோடை விடுமுறைக்கு பின், வழக்கமான கோர்ட்டு செயல்பாடுகள் தொடங்கும் ஜூலை 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

சித்து மூசே வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோய் இன்று கோர்ட்டில் ஆஜர் - பலத்த பாதுகாப்பு

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் ரவுடி கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் சதி திட்டம் தீட்டி சித்து மூசேவாலாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான கோல்டி பிரார் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொலை வழக்கில் கைதாகியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் இன்று அமிர்தசரஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதனால் நீதிமன்றத்தை சுற்றி 50 க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அசாம் வெள்ளத்தால் 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் கார்ணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது.
பஜாலி, பக்ஸா, பர்பேடா, பிஸ்வநாத், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ரூகர், திமா ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கர்பி அங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச், லகிம்பூர், மோரிகாவன், நகாவன், சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர் மற்றும் உடல்குரி ஆகிய 27 மாவட்ட மக்களும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைப்புகள் வெள்ளத்தை அடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டினார். அவரது அக்கறை மற்றும் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி" என்று அம்மாநில முதல் மந்திரி டுவீட் செய்துள்ளார்.

இந்தியாவில் இன்று வெகுவாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 17 ஆயிரத்து 73-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 18 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 486 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 97 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 ஆயிரத்து 700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரத்து 196 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.