Showing posts with label District News. Show all posts
Showing posts with label District News. Show all posts

11 வருட காதல் கைகூடியது: இந்தோனேசிய பெண்ணை கரம்பிடித்த குமரி வாலிபர்

கன்னியாகுமரி ராஜசங்கீத தெருவை சேர்ந்தவர் எழில் குமார் (வயது 33). ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்த இவர் துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார். அதே ஓட்டலில் இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மன் (31) என்பவரும் பணிபுரிந்தார். ஒரே ஓட்டலில் பணிபுரிந்ததால் எழில்குமாருக்கும், ரினாவதி ராஸ்மனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியது. வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்தார் வருடங்கள் பல கடந்தும் தங்களுடைய காதலில் இருவரும் உறுதியாக இருந்தனர். கடல் கடந்த இந்த காதலை இருவருடைய பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. 11 வருட காதல், திருமணத்தில் கைகூட போகிறது என்ற உற்சாகத்தில் ஜோடி இருந்தது.

அதே சமயத்தில் திருமணத்தை கன்னியாகுமரியில் நடத்த எழில்குமார் விரும்பினார். இதற்கு ரினாவதி ராஸ்மனும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடல் கடந்த காதல் அனுபவம் குறித்து எழில்குமார் கூறுகையில்," என்னுடைய தந்தை அமலன்-தாய் தமிழ்ச்செல்வி. எனக்கு 2 அக்காள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். மீனவ சமுதாயத்தை சேர்ந்த நான் படிப்பை முடித்ததும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியில் சேர்ந்தேன்.

அப்போது அங்கு பணிபுரிந்த இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மனுவை காதலித்தேன். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்" என்றார். மணமகள் ரீனாவதி ராஸ்மன் கூறுகையில், "இந்தோனேசியா நாட்டை சேர்ந்த நான் சிறுவயதாக இருந்த போதே எனது தந்தை இறந்து விட்டார். எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்காள், ஒரு தங்கை உள்ளனர்.

தாயார் மினார் மார்பன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன். எழில்குமாரின் பழகும்விதம் எனக்கு பிடித்திருந்தது. இதனால் அவரை காதலித்தேன். 11 வருட காதலை குடும்பத்தினர் ஏற்று கொண்டதால் தற்போது திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய திருமணத்திற்கு தாய் மற்றும் உறவினர்கள் சிலர் வந்திருந்தனர்" என்றார்.

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு

திங்கள்சந்தை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற சிறுமி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் சுஜித் (வயது 27), தொழிலாளி. இவர் இரவு செட்டியார் மடத்தில் உள்ள தனது உறவினர் மகள் வாணிஸ்ரீயை (15) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திங்கள்நகர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். பூசாஸ்தான்விளை பகுதியில் மோட்டார் சைக்கிள் வரும்போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை சுஜித் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். அப்போது, சுஜித் முந்தி செல்ல முயன்ற பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். விசாரணை இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாணிஸ்ரீயை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து பற்றி அரசு பஸ் டிரைவர் குமரேசன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ருங்கலில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருங்கலில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் பஸ் நிலையம் முன் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், அக்னிபத் என்கிற திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தில் 6 மாத பயிற்சியும், 42 மாத பணியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 42 மாதத்திற்கு பிறகு 11,500 பேருக்கு வேலை உறுதி செய்யப்படும். மீதியுள்ள 34,500 பேர் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் தவறான வழியில் அழைத்து செல்லப்படுவார்களேயானால், அதைவிட பேராபத்து இந்த நாட்டிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

போராட்டத்திற்கு வட்டார தலைவர்கள் டென்னிஸ், கிறிஸ்டோபர், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களின் ஒருங்கிணைப்பாளர் சாண்டி உம்மன், மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அபிஜித், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் போதை பொருள் தடுப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்குனர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெம்போ மீது பஸ் மோதிய விபத்தில் தாய், மகன் காயம்

ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் லிங்க ராஜா (வயது 32), டிரைவர். இவருடைய தாயார் கலா (55), வைராகுடியிருப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஓட்டலுக்கு தேவையான விறகு வாங்குவதற்கு லிங்கராஜா வைராகுடியிருப்பை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மினி டெம்போவை எடுத்துக்கொண்டு தாயார் கலாவுடன் பாம்பன்விளை அருகே உள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்றார். அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டெம்போ மீது மோதியது. இந்த விபத்தில் லிங்கராஜாவும், கலாவும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் கலாவிற்கு கை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மின்கம்பமும் சேதமடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது. பின்னர் பாபு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சை கொண்டு சென்றார்.

அப்போது அந்த பஸ், பருத்திவிளை சந்திப்பில் வைத்திருந்த பேரிகார்டு மீது மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.